search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர் வீடு கொள்ளை"

    பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டி ரூ.7 லட்சம் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு திருமாந்துறை நோவா நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 43). இவரது கணவர் ராஜேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதனால் ஸ்டெல்லா தனது மகன் கார்த்திக்குடன் வசித்து வந்தார். அவர் காண் டிராக்ட் முறையில் வீடுகள் கட்டி கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்றிரவு கார்த்திக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார். வீட்டில் ஸ்டெல்லா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் ஸ்டெல்லாவின் கை, கால்களை கட்டியதோடு, வாயில் பிளாஸ்திரிய ஒட்டியுள்ளனர்.

    பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.

    இதையடுத்து கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு, கார்த்திக் சமீபத்தில் வாங்கிய புதிய சொகுசு காரையும் கடத்தி கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கார்த்திக், கார் காணாததை கண்டும், வீட்டின் கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தனது தாய் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

    பின்னர் நடந்த சம்பவத்தை கேட்டறிந்த அவர், இது குறித்து உடனடியாக மங்களமேடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர் மாவட்ட சோதனை சாவடிகளில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு காரின் நம்பர் தெரிவிக்கப்பட்டு, சோதனையை தீவிரப் படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Robberycase

    ×